புரட்சி கவிதை

ஈழம் பாடாத இதயம்.

19, April 2013
Views 1182

மங்களத்து ஓசைகளெல்லாம் சிங்களத்துப் பாசையிலே சிணுங்கிவிட
வங்காளத்து கடலதுவும் வக்காலத்து வாங்கி வந்து
முக்காலத்து முனிவர்களாய் மூச்சு விடும் போதினிலே
மத்தாப்பாய் வெடிக்கின்றது ஈழத்து நினைவுகள்.

ஈழத்து இதயங்களின் ஆழத்தில் தடம் பதித்த
இரத்தக்கறையின் இறுமாப்பில் இத்துப்போன இளைஞர்களையும்
யுத்த ஓடையிலே சுத்தமாய் கலந்து விட்ட யுவதிகளையும்
உரமாய் கொட்டிவிட்டோம் ஈழத்து பூமியிலே.

தமிழினத்து தார்மீகக் கடமைகள் உணர்வின்றி தத்தளிக்க
உணவின்றி உள்ளுணர்வும் ஒன்றாக சங்கமிக்க
வாழ்வின் விடியலைத்தேடி வலை விரித்தோம் பூமியிலே
கண்டெடுத்தோம் எங்கள் உறவுகளின் மண்டைஓடுகளை

அழுகைக்கும் சலித்துவிட கண்ணீரும் வற்றியாச்சு
வரண்டுபோன கண்மணிகளும் வானம் பார்த்த பூமியாச்சு
உரிமைகளைப் பெறுவதற்காய் ஏறியிறங்கும் படிகளிலே
சுயநலப் பாசியும் சுயகௌரவமாய் படிந்தாச்சு

தமிழனாயப் பிறந்ததற்காய் தாய்வீடும் துரத்திவிட
அந்தரத்தில் அலைமோதும் அறுந்துவிட்ட பட்டம் போல்
அங்கும் இங்குமாய் உரிமைப் பிச்சை கேட்டதனால்
புனர்வாழ்வுப் பட்டறையில் வாழ்கிறோம் காய்ச்சிய தமிழனாய்

இன்றும் ஈழம்பாடப் புறப்பட்ட இதயங்கள் எல்லாம்
கோலம் மாறி உருக்குலைந்து உணர்விழந்து
வாடுகின்றது சிங்களத்து சின்னத்துடன் இன்னும்
சிறைகள் என்ற சின்னக் கூட்டுக்குள்ளே..