காதல் கவிதை

தவிப்பு...

13, December 2017
Views 712

ஓர் நாளில் ஒரு சில நொடிகள்
எனக்காய் ஒதுக்கிட மாட்டாயா - என
ஓராயிரம் முறை உனை
கேட்டுவிட்டேன் தவறிவிட்டாய்
ஒருவேளை எனையே ஒதுக்கி விட்டாயோ?

கூறிவிடு என் கண்ணே
நீயின்றி வாழ்வதினும்
நீங்கி விடுகிறேன்
உனை அல்ல உலகத்தை

வேலைப்பளு எல்லாருக்குமுண்டு
ஏற்றுக்கொள்கிறேன் - ஆயினும்
உனக்கான உன் நேரத்தில்
எனக்கென சில நிமிடங்கள்
இதுவல்லவோ நான் கேட்பது

கன்னங்கள் உரசி காதலித்த கணங்களும்
நெஞ்சோடே அணைத்து நேசம்
பகிர்ந்த பொழுதுகளும்
முத்தமிட்டு மூச்சிறைத்த நினைவுகளுமே
நிலையாகிப் போனதடி எனக்கு

தினமும் தேடுகிறேன்
எனைவிட்டு ஓடிவிட்ட
எந்தன் இதயத்தை - அது
உன்னிடம் இருப்பதை மறந்து விட்டு

என்று காண்பேனோ
எனை புதிதாய் எழுதிய
ஊசி விழிகளை
முழுதாய் எனை கட்டிப்போட்ட
உந்தன் கூந்தலை

மார்போடே சாய்ந்து கண்ணீர் மல்கும்
உன் மென்மையை
சண்டையிட்டு முத்தமிட்ட எனக்கான
உனது உதடுகளை

நீயின்றி மரித்துப்போனேனடி - இனியும்
வரமாட்டாயோ எனைத்தேடி!!!

கட்டாயப்படுத்தி வருவதல்ல
காதல்
கட்டுப்பாடுகளை மீறி நிற்பதே
காதல்

நேரம் கிடைக்கையில்
செலுத்துவதல்ல நேசம் - எனக்கென
நேரம் ஒதுக்கி செலுத்துவாய்
உந்தன் பாசம்

என்றென்றும் உனை மாத்திரம்
உள்ளத்தில் சுமந்தபடி
உயிரின்றி காத்திருக்கிறேன் - உந்தன்
குரல் கேட்க உயிர்பெறுவேன் யான்