நடப்பு கவிதை

நானும் நாய்க்குட்டியும்..!

15, May 2017
Views 624

நாங்கள் இருவர்
ஒற்றைப் பிறவிகள்
உறவுகள் இல்லை
உறைய இடமில்லை
சென்றவிடமெல்லாம் தேசம்
எங்கள் சொந்தமே

சிரிக்கையில்
சேர்ந்து சிரிக்க யாருமில்லை
அழுகையில்
ஏனென்று கேட்க நாதியில்லை

அவளுக்கு என்னையும்
எனக்கு அவளையும் தவிர
அரவணைப்பார் யாருமில்லை

நானின்றி அவளோ
அவளின்றி நானோ
ஒரு நொடியும் சுகம்
சுகித்ததில்லை

ஒரு தட்டில் உண்டு
ஓரிடத்தில் உறங்குவதுண்டு
கதைகள் பல பேசி
கால் போன போக்கில்
காததூரம் செல்வதுண்டு

மரத்தடி நிழலில்
மணிக்கணக்கில் உறைவதுண்டு
நதி கடல் தென்பட்டால்
நீராடி விளையாடுவதுண்டு

என் மேனி அழுக்கெல்லாம்
கொஞ்சிக் கொஞ்சியே
சுத்தம் செய்வாள்

குளித்து வருகையில் - தன்
புழுதி நிறை கைகள் கொண்டு
மீண்டும் அழுக்காக்கி விடுவாள்

உறவுகள் எல்லாம்
உதறி விட்ட வேளையில் - நான்
உதறினாலும் என்னை
உதறாமலிருப்பது அவள் மட்டும் தான்

சுய நலமிக்க
உறவுகள் மத்தியில்
என் நலம் பேணும்
ஒரே ஓர் உறவு அவள்

இவள் போல இன்னும் சில
உறவுகள் தேடுகிறேன்
கிடைத்து விட்டால் - நான்
உங்களிலும் உயர்ந்தவள்