நடப்பு கவிதை

யார் பயங்கரவாதி ?

கிரிஷாசன்
28, April 2013
Views 1543

மனிதனை  அழித்து   மனிதனே வளரும்
மாபெரும் உலகமடா - இதில்
புனிதமும் கொன்று பெருந் தமிழழித்து
பேய்நின்று சிரிக்குத்தடா
தனியுரம் கொடுத்து தலை கொள்ள விட்டான்
தருமமும் கயவனடா  அட
இனியிதைக் கேட்க எவரிடம் செல்வோம்
இறைவனும் திருடனடா

சிறுவனை அழித்து சிறுமியைக் கெடுத்து
சிரம்கொள்ளும் அரசொன்றடா - அது
அறுப்பதுகழுத்து அருந்துவதுதிரம்
இது அவர் இறைமையடா
உறுப்பது உடலில் இருபது தமிழர்க்
குரிமையே இல்லையடா - இதில்
பொறுப்புள்ள  உலகம் புன்னகை பூத்துப்
பெருமையும் கொள்ளுதட்டா

சிரிப்பதை மறந்து  சிறியவர் கிடந்து
சிறைகள்   வாடுகிறார் - தோல்
உரித்தவர் கொன்று ஒளிப்படமெடுத்து 
உரிமையென்றாடுகிறார்’
அரியணைமீது அமர்ந்தவன் கண்டே
ஆனந்த போதைகொள்ள - மா
விரிந்திடு உலகோர் வெறிகண்டுமேனோ 
விடையின்றி நாணுகிறார்

பாலகர் சிறுவர் பாடங்கள் பயில
படைவதை கூடங்களா - இவர்
ஓலமும் அழுகை ஓசையில் கேட்க 
உயிரெழுத்(ந்) தோடுவதா
காலனின் கையாள் கருதவதேது
கைக் குண்டு குழந்தைகளா - இந்த
பாலறு  வாயர் பாருலகே யார்
பயங்கர வாதிகளா?