நடப்பு கவிதை

இரண்டாவதா?

கவிவான்
19, January 2013
Views 906

என்ன... இரண்டாவதா?
மனம் இரண்டாவதா? மானம் இரண்டாவதா?- எம்
இனம் இரண்டாவதா? இனஎழுர்ச்சி இரண்டாவதா?
சனம்இரண்டாவதா? சந்ததி இரண்டாவதா?-எம்
சரித்திரம்இரண்டாவதா? உயிரின்சாவு இரண்டாகுமா?

நினைவிரண்டாவதா? நினைவேந்தல் இரண்டாவதா?- ஒருவன்
நிழல் இரண்டாகுமா? நிஜம் இரண்டாகுமா? இல்லையே!
இரண்டாவதை விரும்பாத இனம் இரண்டாகினால்..............
இருந்த இருப்புமின்றி ஈனமாவதுதானா இனத்தின் பெருமை?

என்ன? என்ன இரண்டாவதா? இரண்டகரால்.........இரண்டாவதா?
ஒருவழியில் ஒருநிலையில் ஒருவன் பின்னே- என்றென்றும்
ஒன்றாய் நின்றவர் என்றால்.............ஏன் ? எப்படி?
எதெற்கு இரண்டாவது? எதெற்கு இரண்டாவது தேவை?

திரண்டெழுந்த தமிழர் தீர்வொன்றே தேவையெனவாழாது
முரண்டுபிடிப்பது மூர்க்கத்தனமில்லையா?-சுரண்டுபவர்கள்
சுரண்டினால் சுண்டுவிரல் கொண்டு சுண்டித்தள்ளாது
அருண்டு நிற்பவனை எப்படித்தமிழன்என்பதோ?

புரண்டுபுரண்டுவர புழுதியில் போட்டு உருட்டினாலும்
ஒட்டும்அளவுதான் ஒட்டும் உடலில் என்பதுபோல்
நாவரண்டு- உடல்புரண்டும் நலமிழந்து உயிர்த்தீ எரித்துரைத்தும்
அருண்டவர் அகக்கண்கள்  இன்னும் திறக்குதில்லையோ?


அன்னை மண்ணில் ஓடிய அவலஆறு கண்டும்கூடவா
அடுத்தவனுக்கு  துணையாவதோ?இதுஎன்னரோகம்?
அவன் நிகழ்ச்சி நிரலுக்கு இனியும்தான் ஆளவதோ?-உன்
அடிமையுணர்வு  மனக்குடியிருந்து ஓடாதோ?

இனவிடுதலை விடியாஇரவா? முடியாத்துயரா?
இன்னும் தான்அடிமையும் அடியாள் நினைவுமேன்?