ஏனையவை
தாய்
![]() |
நான் கரு இருந்த கோயில்
அவள் தெய்வத்தின் அவதாரம்
அன்புக்கு அடையாளம்
இந்த பிரபஞ்சம் எல்லாமே
தாயின்றி எனக்கேது
கனவுகள் பல கண்டு
பத்தியத்தோடு கரு சுமந்து
இடுப்புவலி பொறுத்து
ஈன்று என்னை எடுக்கவே
செத்துப் பிழைத்தவளே
உன் வேதனை நான் அறிஞ்சதில்ல
நீ சொல்லி பேசவில்லை
என் சிரிப்பில் நீ மறந்தாய்
பெத்த கடன் நான் மறந்தேன் .
கோடைமழை கொட்டயில
ஊரெல்லாம் கொள்ளைநோய்
பேதியில நான் கிடக்க
மாறாப்பு சேலயில
மொட்டாக்கு போட்டென்னை
காட்டாசுபத்திரிக்கு கால்நடையாய்
கொண்டு போய் வருவாள் ..
அம்மலோ தும்மலோ
மடியில தலைவைத்து
முடிகோதி கதைசொல்லி
தூங்க வச்சு கண்விழித்து
காத்திருப்பாள் .
நான் பள்ளிக்கு போகையிலே
பாதி வழியனுப்பி
இடுப்பில எனைத்தாங்கி
அடுப்பில வெந்தென்னை
ஆளாக்கிவிட்டவளே
சிணுங்கி விளக்கெரியும்
அனுங்கி கோழிகூவும் முன்னே
நெல்லரிசி குத்தி முட்டிபானையில
சுண்டக்கஞ்சி செய்து
இளம் சூட்டோடு நீ தருவாய் ..
சொல்ல வாயூறும் சில்லுப்பூட்டும்
கதகதக்கும் மீன் குழம்பும்
இன்னும் நினைக்கையில
அடி நாவில் நீரூறும்
பஞ்சமும் பட்டினியும்
தலை விரிச்சு ஆடயில
தன் வயித்தக்கட்டி
என் வயிற்ற வளத்தவளே
பொல்லாப்பு வந்ததென்று
ஊரெல்லாம் ஒப்பாரி
என்னுயிர் நீ காக்க
நீ பட்ட பெரும்பாடு
சொன்னாலும் தீராது
தாயே உன்கடன் எப்படி
நான் தீர்த்திடுவேன்
சீமையில நான் வந்து
சிந்தனைகள் சிதறியது
சீர்கெட்ட வாழ்வான செந்தமிழர்
எம்பெருமை சொல்ல வாய் கூசியது
சொந்தங்கள் நான் மறந்தேன்
யாரெவரோ பேர் மறந்தேன்
காலங்கள் போனபின்னும்
பெத்தவளே என் நினைவு
உன்னை விட்டு போகலையே .
தொலைபேசி தந்தியில
என் சுகத்த நீ அறிஞ்ச
உன் சுகத்த மெய் மறந்தாய்
பேரன் பேத்திகளை அங்கலாய்ப்பாய்
பார்க்க எண்ணி
சித்திரையில் வெய்யிலென்றாய்
மார்கழியில் குளிரென்றாய்
தையிலே பொங்கலென்று
சொல்லாம சொன்னாய் .
எழுத்தறிஞ்சு படிச்சதில்ல
ஊருலகம் தெரிஞ்சதில்ல
உன்னுலகம் எல்லாம்
உன் பிள்ளை உன் மக்கள் தாயே
உன்பெருமை சொல்ல நாட்கள் போதாது
நான் கள்வனோ காடனோ
கொலைகாரன்தானோ
நான் விம்மி அழுதால்
உன் நெஞ்சம் தாங்காது
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
தாயுள்ளம் ஒன்றே
என்றும் அன்பு கொள்ளும்.

வைகாசி பதினெட்டு 




