காதல் கவிதை

மது விழியாள்..!

22, June 2017
Views 436

மெல்லக் கண் திறந்திட்டால்
மேகங்கள் மோதும் - விழி
எல்லோர்க்கும் மதுதந்து
இதயத்தைக் கோதும் !

அலங்காரம் இல்லாத
அனிச்சம் பூக்கந்தம் - இவள்
அன்புக்குள் வளர்கின்ற
அனைத்துக்கும் சொந்தம் !

அரும்புக்குள் சுரக்கின்ற
அருந்தேனாய்ப் பார்வை - இவள்
அகமென்றும்  தாயைப்போல்
அணைக்கின்ற போர்வை !

மலர் நாணப் பனிபட்டால்
மணம் சோலை கொள்ளும் - இவள்
மருதாணி விரல்தொட்டால்
மனம் காலை துள்ளும் !

உயிருக்குள் சாயாமல்
உணர்வாகிப் போனாள் - என்
உள்ளத்தை மேயாமல்
உலர்தேனாய்  ஆனாள் !

கரும்புக்கும் இவள்பேச்சு
களிப்பூட்டக் கண்டேன் - அதைக்
காலத்தின் பொருளாக்கிக்
கவிபாடிக் கொண்டேன் !

எல்லைகள் இல்லாத
எழில்வானம் நீயே - உயிர்
இம்மைக்கும் மறுமைக்கும்
இடைப்பட்ட தீயே !