காதல் கவிதை

காலமே கவிதை நண்பா!...

19, August 2016
Views 1038

வானமே எல்லை கொண்ட
வாலிபக் காதல் வந்தால்
மானமே போயும் நெஞ்சில்
மறந்திட முடியார் வாழ்வில்
கானமே தனிமை போக்கும்
காய்ந்துயிர் வேகும் தன்னுள்
ஊனமே அடைந்தும் எண்ணார்
உலகிது மாயம் என்றே!

ஆரணங் கவளால் வெற்றி
அடைந்தனன் என்று நாளும்
பாரணங் கொண்டால் வஞ்சம்
பறந்திடும் பஞ்சாய் ! வாழும்
காரணப் பொருளாய் ஏற்றுக்
கயமைகள் களைந்தால் வஞ்சி
பூரணப் பொய்கை வாழும்
புண்ணியக் கமலம் ஆவாள்!

காரிகை மனத்தைச் சேரும்
காதலால் வந்த கண்ணீர்
தூரிகை நழுவித் தன்னால்
துயர்வரைந் தழுத போதும்
சாரிகை எடுத்துச் சென்ற
சருகதாய் நெஞ்சம் வாடிப்
பேரிகை கொட்டிப் போகும்
பிறப்பிது பாவம் என்றே!

ஆலமே உண்டும் ஆசை
அகன்றிடா அன்பின் ஓசை
சீலமே சிறைதான் என்று
சிதைத்திடும் அறிவை நின்று
தூலமே துணியாய் மாறும்
துணிந்தவன் வாழ்க்கை தேறும்
காலமே கவிதை நண்பா!
கருத்தெழப் பாடு தண்பா!