ஏனையவை

ஓரறிவின்றேல் ஆறறிவில்லை

15, December 2015
Views 1048

ஓரறிவைக் கொண்டிருந்தும்
ஒவ்வோர் ஆண்டும்
உதிர்க்கின்ற இலைகொண்டே
உரத்தை ஊன்றும்!
ஊரறியாச் சுழியோடி
உறிஞ்சும் நீரை
உலகுக்கே மழையாக்கும் !
வீழும் போதும்
பாரறியப் பசிபோக்கும்
உணவைச் செய்யும்
பாமரனின் வயிற்றுக்காய்
நெருப்பை உண்ணும்
கூரரிவாள் கொண்டதனை
வெட்டிச் சாய்த்தும்
குலங்காத்துக் குடிவாழக்
குடிசை ஆகும்!

இரப்போர்க்கும் இல்லையெனாச்
சமூகம் போலே
இறக்கின்ற வரைதன்னில்
பறவைக் கூட்டைக்
கரமேந்திக் காத்திருக்கும்!
கிளையும் தண்டும்
கடவுளுக்கும் பூ..கனிகள்
காய்த்துக் கொட்டும் !
மரப்போரும் தேன்கூட்டை
வளர்க்கச் செய்யும்
மருந்தாகி உணவாகி
வாழ்வைக் காக்கும்
வரம்போலும் இறையீந்த
 மரத்தைக் காப்போம்
வருங்காலச் சந்ததிக்காய்ப்
பசுமை சேர்ப்போம் !

சூழலதன் சுத்தத்தைப்
பேணும் மக்கள்
சுவாசிக்கும் காற்றுக்கும்
இனிமை கூட்டும்!
வாழவழி காட்டுகின்ற
வம்சம் போலும்
வருகின்ற வெயிலுண்டு
நிழலைத் தூவும்
ஏழைதனை எரித்தாலும்
சாம்பல் ஒன்றாம்
ஏற்றத்தாழ் வில்லையென
எடுத்துக் காட்டும்!
வேழமுகம் கொண்டானும்
விரும்பும் இந்த
விருட்சங்கள் தனைக்காத்தால்
விடியும் நாடே !

பருவத்தின் மாறுதலை
உணரச் செய்யும்
பகல்மூச்சில் ஒட்சிசனை
இட்டுச் செல்லும்
உருவத்தை வலிந்துழவன்
பயிரை நட்டால்
உயிர்ப்பூட்ட நல்லமழை
காற்றும் நல்கும்
குருவித்தை போல்மரங்கள்
காட்டும் கற்கை
குறைவின்றி உணர்வுள்ளே
சேர்க்கா விட்டால்
துருவங்கள் போல்வாழத்
தகுதி இல்லாத்
துயரத்தில் பூவுலகும்
தொலைந்தே போகும் !