ஏனையவை

பிரிவிற்கு முன் சில வார்த்தைகள் தோழியுனக்கு

14, April 2011
Views 58436

புனிதம் என்றால்  நீயென்றிருந்தேன்
களங்கம்தான் உன் பண்பென்றாய்
புரிய வைத்தாயதை உன்செயலால்

அடர்வனப் புதர்களின் மத்தியில்
பிரவகித்தோடும் வெண்மை நதியாய்
கற்பிதம் செய்திருந்தேன் உன்னை
துர்நாற்றம் நாசியில் மோதியது..
புரிந்து கொண்டேன் நீ
தேங்கிக் கிடக்கும் குட்டையென்பதை

அன்பும் பாசமும் தானுன்னிடம் யாசித்தேன்
அதையன்றி வேறொன்றையறியேன்
அகங்காரம் கொண்டவுன் திமிரில்
களைத்துவிட்டேன் தேடி
ஓடியொதுங்க இடமெங்கேயென்று

நீ நாடும் ஓர்மனதுக்காய்
உனைத் தேடும்
அன்புள்ளங்களை காயப்படுத்தி
காதல் வேகத்தில் நீ
கனவுகளுக்காய்
கரைகின்றாய் இன்னும்

உனக்கு ஒரு முகமும்
எனக்கு மறு முகமும் மாற்றி
உன்னை முகமிழக்கச் செய்கின்ற
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்

பகை சொல்லி முறைக்காது
புன்னகைத்து உன் கால்வாரி
முதுகில் குற்றும் முகங்களே
உன்னைச் சுற்றி நிற்கின்ற
உண்மைகளை
என்றைக்கேனும் நீ புரிந்து கொள்வாய்..
அன்றைக்கு
எங்கோ நானிருப்பேன்
உனை முற்றாய் மறந்து…