புரட்சி கவிதை

மனிதநேயம் மலர

வின்சி
27, June 2009
Views 5013

ஈழத்தில் குண்டு வெடிப்பு
எங்கள் இதயங்களின்
புகை மண்டலம்

அங்கு எழும் அழுகுரல்
இன்னும்
எங்களின் செவிகளில்

அவர்கள் சிந்திய
கண்ணீர் துளிகள்
எங்களின் உயிரையும் நனைத்தது

தோண்டத் தோண்ட குண்டுகள்
ஈழமென்ன வெடிகுண்டுகளின்
அட்சய பாத்திரமா......?

வெடித்த சத்தம் ஓய்வதற்குள்
இன்னொரு பலியா?

இறந்தவர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள்,
என்பதற்கு மேல்
தமிழர் என்பதை ஏன் மறந்தீர்...?

மனிதநேயம் மதங்களுக்கு
அப்பாற்பட்டது,
எந்த மதமும் சொல்லவில்லை
மனிதநேயத்தை மறக்கும்படி,

இனியாவது மனிதநேயம்
காத்து நிற்போம்
இல்லையானால்
மனிதன் என்ற பெயரை
மாற்றி வைப்போம்.